மறக்க முடியா எம்
கிராமத்து நினைவுகள்
இறக்கும் வரை மறவா எம்
இதயத்து உறைவுகளாய்.....
எண்ணில் அடங்கா ஞாபக
நதிகளில் மூழ்கி பெறும்
நினைவுகளின் தரிசனமாய்
விரிகின்ற மனவெளி எங்கும்
பசுமையாய் எங்கிருந்தாலும்
மனசுக்குள் பூத்துக் குலுங்கும்
ஞாபகப் பூக்களாய்
பச்சை பசெலென வெங்காயமாய்
பூத்துக் குலுங்கும் என் கிராமத்து
தோட்ட வெளிகள் கொட்டுமணி
பெரியாடு,மருதந்தெணி பள்ளம் என
விரிகின்ற வெளிகள்
கத்தரி,மிளகாய்,பூசணி,குரக்கன் என
என்றும் எமை உயர வைத்த
உழைப்பின் இருப்பிடங்களாய்
பருவங்களின் மாறுபாட்டோடு
தோட்டங்களைக் கொத்தி பாத்தியிட்டு
வெங்காயம் கொண்டு நட்டு
மிஷின் பூட்டி தண்ணி விட்டு மாறும்
காட்சிகளும் அதற்கான உழைப்பும்
மகிழம் பழம் ஆய்ந்து தின்று
மகிழ்வோடு குளத்தில் நீந்தி
தோட்டக் கிணறுகளில் மூழ்கிக் குளித்து
வீடு போன பொழுதுகளும்
விதம் விதமாய் பட்டம் கட்டி
தைப்பொங்கலுக்கு ஏற்றி மகிழ்ந்த காலங்கள்
தீபாவளிக்கு வெடி கொளுத்தி மகிழ்ந்த பொழுதுகளும்
இப்போது நினைத்தாலும் இன்னிக்கும்
ஞாபகங்களாய் மனதில்.............
மாலையிலே கிட்டிப்புள்,கிளித்தட்டு
புளிபோல்,கிரிக்கெட்,கரப்பந்து,உதைபந்து எனப் பல
விளையாடி பின் மகாமாரி அம்பிகையின்
சந்நிதியில் போய் நின்று பக்தியுடன்
பரவசமாகி பல வரம் வேண்டி
சந்நிதியில் நின்று பல
கதை பேசி மகிழ்ந்த பொழுதுகளும்
சீனியப்புவும்,சீமாக்காணியும்
காவடியாட்டங்களும்,கற்பூரச்சட்டியும்,அன்னதானச்
சோறும்,ஊஞ்சற்பாட்டும்
அழகான சாத்துப்படியும்,ஜயாவின் பக்தியும்,
அம்மன் வீதியுலாவும்
திருவிழாக்களும் சோடிப்புக்களும்
இரவிரவாய் நிகழ்த்திய நிகழ்ச்சிகளும்
மணவாளக் கோலமும் என்
கிராமத்தின் பசுமை நினைவுகளாய்
மனவெளியில் நிறைந்தபடி
எப்படி மறப்போம்............
உயிர்ப்போடு எமை உருவாக்கிய
உறைவிடமே உனக்கு நன்றி.