நியூசிலாந்து அணிக்கு எதிரான பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட்
வரலாற்றில் முதன்முறையாக பகல்- இரவு போட்டிகள் நடைபெற்றது. இதில்
அடிலெய்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து- அவுஸ்திரேலிய
அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 202 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 224 ஓட்டங்களும் எடுத்தது.
பின்னர் 22 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய
நியூசிலாந்து ஹாசில்வுட்டின் அபார பந்துவீச்சில் 208 ஓட்டங்களுக்கு
சுருண்டது. ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 187 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா திணற ஆரம்பித்தது.
டிரெண்ட் போல்ட் நேர்த்தியாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்.
இருப்பினும் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்து 3
விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போல்ட் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
திணறிய களத்தடுப்பாளர்கள்:-
பகல்-இரவாக நடந்த இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு பந்து
பயன்படுத்தப்பட்டது. இந்த பந்து அளவுக்கு அதிகமாக மின்னுவதால் களத்தடுப்பு
செய்ய, பிடியெடுப்பு செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள்
எழுந்துள்ளது.
அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தடுப்பு செய்த போது பந்து சூரிய வெளிச்சத்தில் அதிகமாக மின்னியதால் 2 பிடிகளை தவறவிட்டனர்.
அதே போல் பந்து சரியாக தெரியாத காரணத்தால் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் ஒரு பிடியை தவறவிட்டார்.
138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக பகல்- இரவு டெஸ்ட்
நடைபெற்ற நிலையில், இது போன்ற தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பது
முக்கியமான ஒன்று.